நமது கடவுள்கள்  இறக்குமதி சரக்கோகானார். விடுதலை- 30.10.1960

Rate this item
(0 votes)

நானும், எனது கழகமும் யார் என்றால் சமுதாயத் தொண்டு செய்து வருபவர்களே. எனக்கு வயது 82 ஆகின்றது. நான் அறிய இந்த நாட்டில் சமுதாயத் தொண்டு நடைபெறவில்லை.ஏதோ அரசியல் என்று பெயரை வைத்துக் கொண்டு பிழைப்புக்கு இடமாக்கிக் கொண்டவர்கள்தான் இருக்கின்றனர்.

அதற்கு முன் ஏதோ மதத்தொண்டு, பக்தித் தொண்டு என்ற பேரால் நம்மை மடமையில் ஆழ்த்தும் தொண்டுதான் நடைபெற்று வந்து இருக்கின்றன. அதற்கு முன் புராண காலத்தில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆதிக்கம் செலுத்தும்படியான தொண்டுதான் நடைபெற்று இருக்கின்றது. நமக்கு மக்கள் தொண்டு, சமுதாயத் தொண்டு அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் நடைபெற்று வந்து இருக்கிறது. நமக்கு எதையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ள உரிமை இல்லாத நிலைமை யில்தான் இருந்து இருக்கின்றோம். மனித சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வரவொட்டாமல் கடவுள், மதம், சாஸ்திரத் தால் கட்டுப்படுத்தப்பட்டு சிந்திக்க வகையற்றவனாகவே ஆக்கப்பட்டு இருக்கின்றான். 

நமது கடவுள் அமைப்பு 4000, 5000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இந்தக் கடவுள் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்டதாகையால் காட்டுமிராண்டி குணங்களே கற்பிக்கப்பட்டுள்ளன. அதுபோன்றே நமது மதமும் ஆகும். அதுபற்றி எவனும் சிந்திப்பதே இல்லை. ஏதோ வெறியில் உளறுவான்கள். ஆனால், நமது மதம் என்ன, அது எப்போது ஏற்பட்டது. யார் ஏற்படுத்தியது என்று எவனுக்கும் தெரியாது. அதுபோலவே கடவுளைப்பற்றி எவனுக்காவது தெரியுமோ? சும்மா காட்டுமிராண்டி காலக் கடவுள் தன்மையை உளறுவானே ஒழிய கடவுள் என்றால் என்ன, அது எப்போது ஏற்பட்டது, அதனால் நாம் அடைந்த நன்மைகள் என்ன? என்று எவனும் சிந்திக்கவே இல்லை . 

நாடகக்காரன் ராஜா வேஷம் போட்டுக்கொண்டு நடிப்பது போல இந்த மடையன்களும் சாம்பல் அடித்துக்கொள்கின்றான்; கொட்டை கட்டிக்கொண்டு பக்தன்போல வேஷம் போடுகின்றான். தோழர்களே! நான் சராசரி வயதுக்குமேல் இரண்டு பங்காக வாழ்ந்துவிட்டேன். ஏதோ பூமிக்குப் பாரமாக இருக்கும் வரை நம்மால் ஆன சமுதாயத் தொண்டை செய்வோம் என்று நினைத்துத் தொண்டாற்றுகின்றேன். எங்கள் தொண்டு எதிர்நீச் சல் போன்றது. மலைமீது குண்டு ஏற்றுவது போன்றது. எங்கள் தொண்டு தோற்றால் எங்களுக்கு நஷ்டம்தான் என்ன? நாங்கள் மனித சமுதாயத்தில் பிரதிபலன் எதுவும் பார்க்கவில்லை; வயிறு வளர்ப்பவர்களும் அல்ல. நாங்கள் சொல்லுகின்றோம்; மக்க ளுக்கு புத்தி வந்தால் வரட்டும்; இல்லாமல் போனால் போகட்டும். இன்று இல்லாவிட்டாலும் இன்னும் கொஞ்ச நாள் கழித்தாவது புத்தி வராதா என்ற நிலையில்தான் தொண்டு செய்கின்றோம். மனிதன் உயிர் ஒன்றும் கொழுக்கட்டையல்லவே; அவன் சிந்திக்கும் தன்மை உடையவனாயிற்றே? இன்று நமது நாட்டில் உள்ள கடவுள்கள் எல்லாம் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்ட கற்பனைகள், மனிதத் தன்மைக்கு மாறானவை. அதுபோலத்தான் நம் முன்னோர்கள் என்பவர்களும்; 1800-ல் இருந்தவ னுக்கும், 1900-த்தில் இருப்பவனுக்குமே வித்தியாசம் பல பார்க்கின்றோம். 1800-ல் இருந்தவன் ரயிலைக் கண்டானா? இந்த விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் கண்டானா? சக்தி முக்கிக்கற்கள் காலத்தில் வாழ்ந்தவன்தானே? 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி இருப்பான்? சுத்தக் காட்டுமிராண்டியாகத்தானே இருந்து இருக்க முடியும்?

நாம் வாழ்வது 20-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றாற்போல் வேண்டுமானால் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் அமைத்துக் கொள்ளவேண்டும். இன்றைய சமுதாய தொண்டு என்பது இந்த நாட்டில் இருந்துவரும் காட்டுமிராண்டிக் கடவுள்களையும், மதங்களையும், சாஸ்திரங்களையும் ஒழித்து, மனிதன் மனிதத் தன்மை அடையும்படியான செயலில் ஈடுபட்டு உழைக்கவேண்டும் என்பதாகும்.

நம் கடவுள் எதை எடுத்துக்கொண்டாலும் எப்போது ஏற்பட் டது தெரியுமோ? மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதுமுதல் இன்று வரைக்கும் இப்படி காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. 

எந்தக் கடவுளை வேண்டுமானால் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவைகளின் யோக்கியதை என்ன? மனித னுக்கு ஒழுக்கம் எது, எது ஒழுக்கமில்லாதது என்று தெரியாத காலத்தில் ஏற்பட்டது. மனிதனுக்கு அன்பு எது, கருணை எது என்று தெரியாது மனிதனை மனிதன் கொன்று தின்ற காலத்தில் ஏற்பட்டதன் காரணமாக இந்தக் கடவுள்களுக்கு ஒழுக்கமோ, நாணயமோ, அன்போ, கருணையோ வைக் கப்படவில்லை . ஏன்? இவைகள் இல்லாத காலத்தில் ஏற்பட்டது. இன்று நாம் நினைக் கின்றோம், மனிதனுக்கு மனிதன் அன்பாக, ஒழுக்கமாக, நாணயமாக இருக்கவேண்டுமென்று; பெயரளவில் வேண்டுமானாலும் கூறுகின்றோம். இந்தக் காலத்தில் கடவுள் ஏற்படுத்துவதாக இருந்தால் கடவுளை ஒழுக்கம் உடையதாக, நாணயம் உடையதாக, அன்பும், கருணையும் உடையதாகச் செய்வோம். -

மேலும், இன்றைக்கு இருக்கும் இந்தக் கடவுள்கள் ஏற்பட்ட காலத்தில் தாய், தங்கை, மகள் என்று கருதாமல் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்களின் கற்பனையில் உதித்த கடவுள் ஆனதனால் இந்தக் கடவுள்களும் தாய், தங்கையை, மகளை கட்டிக்கொண்டதாக கற்பனை பண்ணிக் கதையும் எழுதியிருக்கின்றான்.

எவ்வளவுக்கு எவ்வளவு பழைய கடவுள் என்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டிக் கடவுள் ஆகும். சிவன் பழைய கடவுள் என்று கூறுவார்கள். இந்த சிவன் ஒழுக்கம் கெட்டவனாக எத்தனை பேர்களைக் கெடுத்து இருக்கின்றான். எத்தனை பேர்களின் புருஷன்மார்களால் இதற்காக சாபம் பெற்று இருக்கின்றான் என்பதைப் பார்க்கலாம். நேற்று சரஸ்வதி பூசை கொண்டாடினீர்கள். அந்த சரஸ்வதி யார்? பிரம்மா உண்டாக்கினான். பிரம்மாவினுடைய மகள். அவள் அழகைக் கண்டு கட்டிப்பிடிக்க முயன்றான். அவள், அப்பனுக்கு உடன்படுவதா என்று ஓடினாள். அவனும் பின் தொடர்ந்தான். அவள் மானாக உருவெடுத்து வேகமாக ஓடி சிவனிடம் அடைக்கலம் புகுந்தாள். சிவனிடம், தன் தந்தையே தன்னைக் கட்டி அணைய நினைக்கின்றான் என்றாள். சிவன், ஏனடா இப்படி என்று கேட்டான். அதற்கு பிரம்மா, நான் என்ன பண்ணுவது; அவள் அழகாக இருக்கின்றாள்; நான் அவளை எப்படி அடையாமல் இருப்பது என்றான். சிவன் மத்தியஸ்தம் பண்ணி இருவரையும் கணவன் - மனைவியாக இருக்க அனுமதித்தான். அதுபோலவே, அப்பனும், மகளுமே புருஷன், பெண்டாட்டியாக இருந்து வருகின்றனர். 

 சில கடவுள்கள் அம்மாளைக் கட்டிக் கொண்டு இருக்கின்றன. சில கடவுள்கள் தங்கையை கட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்த 10,000 வருஷமாக நமது கடவுளோ, மதமோ, சாஸ்தி ரமோ மாறுதல் அடையவில்லை; திருத்தம் அடையவே இல்லை. இவைகளுக்கு நாமும் கட்டுப்பட்டு இருப்பதனால் நாமும் மாறுதல் அடையவில்லை.

நமது சாஸ்திரத்தில் உலகம் பாராட்டத்தக்க பதி விரதையாக 5 பேரைக் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் சீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி. இவர்களை நினைத்தால் பண்ணிய பாவம் எல்லாம் போய்விடும் என்று எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் முதல் நம்பர் விபசாரிகள். இவர்கள் மட்டும் அல்ல; அந்தக் காலத்து ரிஷிகள், தேவர்கள் என்பவர்களும் இவர்கள் போன்ற விபச்சாரத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள்தான்.

அகல்யை என்பவளும் இந்திரனும் திருட்டுத்தனமாகக் கலவி செய்ததை புருஷன் கண்டு இருவருக்கும் சாபம் கொடுத்து இருக்கின்றான். அவள் பத்தினியாகிவிட்டாள்; அவன் தேவர்களுக்குத் தலைவன் ஆகிவிட்டான். 

அடுத்து தாரை. இவள் தன் புருஷனிடம் படிக்க வந்தவனிடம் சோரத்தனம் பண்ணி பிள்ளையும் பெற்றுவிட்டாள். பிள்ளையைக் கண்டு புருஷன் தன்னடையது என்றான். சந்திரன், நான்தானே கொடுத்தேன், எனக்குத்தான் சொந்தம் என்று ரகளை பண்ணினான். புருஷன், நீ கொடுத்தாலும் என் நிலத்தில் விளைந்தது ஆகையால், எனக்கே சொந்தம் என்றான். இந்திரன் பஞ்சாயத்து பண்ணினான். பிள்ளை சந்திரனுடையது என்று அவனிடம் ஒப்படைக்கத் தீர்ப்பு செய்துவிட்டான்.

அடுத்து துரோபதை. இவள் 5 பேருக்கு மனைவியாக இருந்தவள், கோவாப்ரேட்டிவ் பாங்கு மாதிரி. அதுவும் பற்றாமல் 6 ஆம் பேர்வழிமீதும் ஆசைப்பட்டாள் என்று கூறப்படுகின்றது.

அடுத்து சீதை. இவள் இராவணனுக்கு கர்ப்பமானவள். காட்டில் வசிக்கும்போது வேண்டுமென்றே இராவணனுடன் போனவள். இராவணன் தன்னை விரும்பாத பெண்ணைத் - தொட்டால் தலை வெடிக்கும் என்று சாபம் இருந்தது. ஆனால்,அவளைத் தூக்கித் தொடைமீது வைத்துப் போகும்போது அவன் தலை வெடிக்காததினால், அவள் விரும்பியே அவன்பின் போய் இருக்கிறாள். பிறகு இராவணனைக் கொன்று இவளை மீட்டுக்கொண்டு வந்த பின் இவள் 4 மாத கர்ப்பம் என்று தெரிந்து இவள் கணவன் ராமன் இவளை காட்டுக்கு விரட்டி இருக்கின்றான். அங்கு போய் அவள் பிள்ளை பெற்றதும் அல்லாமல், மேற்கொண்டும் ஓர் பிள்ளை பெற்றுக்கொண்டு இரண்டு பிள்ளையோடு வந்திருக்கின்றாள்.

இப்படிப்பட்ட விபசாரிகள் எல்லாம் நமது பதிவிரதைகளாக - கடவுள்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர். காரணம், இவை களை ஏற்படுத்திய காலம் காட்டுமிராண்டிக் காலமாதலால் அந்தக் கால மக்கள் ஒழுக்கத்தினையே பதிவிரதைகளுக்கும் ஏற்படுத்தினார்கள். 

 தோழர்களே! இன்று நாம் கும்பிடும் கடவுள்கள் எல்லாம் நம் நாட்டில் ஏற்பட்டதும் அல்ல; நம் நாட்டுக்காரன் மூளையில் முதலில் உதித்ததும் அல்ல. இவை எல்லாம் மேல் நாட்டில் அய்ரோப்பா தேசத்தில் மலைப் பிரதேசங்களில் உண்டாக்கப் பட்ட கடவுள்கள். அவைகளைத்தான் ஆரியர்கள் நம் நாட்டில் கொண்டு வந்து நமது தலையில் கட்டிவிட்டனர். இன்று சிவன் மாட்டு மேலே இருக்கும் கடவுள் என்று கூறி வழிபடுகின் றோமே; இந்தக் கடவுள் இந்த நாட்டுக் கடவுள் அல்ல. கிரீஸ், பாபிலோனியா, எகிப்து, சிரியா முதலிய நாடுகளில் அவர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த காலத்தில் வணங்கப்பட்டு வந்த வைகள் ஆகும். அவர்கள் சிவனை Father God அதாவது தந்தைக் கடவுள் என்று அழைத்தார்கள். இந்தக் கடவுள் மாட்டுமேல் நின்று கொண்டு இருப்பதாகவும், கையில் சூலம், மழு, வில் போன்றவைகள் சங்க வைத்திருப்பதாகவும் சித்தரித்து இருக்கின்றனர். 

நாம் இன்று சிவனுடைய மனைவி காளி என்கின்றோம். இந்தக் கடவுள் அங்கு Mother God அதாவது தாய்க் கடவுள் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. நாம் காளி சிங்கத்தின் மீது இருப்பதாக ஏற்பாடு செய்து இருக்கின்றோம். அவனும் அந்த நாட்டில் இந்தத் தாய்க் கடவுள் சிங்கத்தின்மேல் இருப்பதாகவே வைத்திருக்கின்றான். இந்த கடவுள் எல்லாம் மேல்நாட்டில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டவைகளேயாகும். அவன் தாய்க் கடவுள், தந்தைக் கடவுள் என்று கூறுவதைத்தான் நமது சிவன், காளியை சைவன் அம்மையே அப்பனே என்று கூறிக் கும்பிடுகின்றான்.

தோழர்களே! நாங்கள் வாயாலே புளுகிவிட்டுப் போகின்றவர் கள் அல்ல. எது கூறினாலும் ஆதாரத்தோடுதான் கூறுவோம். இதுபற்றி வெள்ளைக்காரர்களும், நம் நாட்டு சரித்திரக்காரர்களும் எழுதி இருக்கின்றார்கள். மற்றபடி எமன், அக்னி, சூரியன், வருணன், வாயு, சரஸ்வதி, பிள்ளையார், சுப்ரமணியன் போன் றவர்களும் அங்கு இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே. அவைகளை இங்கு கொண்டு வந்து புக வைத்து பெயர்களை மாற்றிக் கொடுத்து இருக்கின்றான்.

மனு தர்மத்தை எழுதியவன் மனு என்பவன். இவனும் கடவுள். இவனது அம்மாவை கட்டிக்கொண்டவன் இவன். மேல் நாட்டில் அம்மாவைக் கட்டிக்கொண்ட கடவுளைப் பார்த்து ஏற்படுத்தப்பட்டவன். வாயில் மட்டும்தான் அன்புக் கடவுள், அருள் கடவுள் என்கிறான். இப்படி கூறவேண்டிய அவசியம் அவன் கொண்டு வந்து புகுத்திய காலத்தில் இந்த நாட்டு மக்கள் அன்பும், அருளும் உடையவர்களாக இருந்ததினால் கடவுளுக்கும் கூறவேண்டியதாயிற்று. 

மேல்நாட்டவன் தோற்றுவித்த தங்கள் காட்டுமிராண்டிக் கட வுள்களையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் இப்போது ஒழித்துவிட்டு புதிதாகக் கடவுளையும், மதத்தையும் உண்டாக்கிக் கொண்டான். அதுதான் கிருஸ்தவன் கூறும் கடவுள், கிருஸ்தவ மதம் ; அவனது ஒரே கடவுள், அது பிறப்பு இறப்பு இல்லாதது, எதுவும் வேண்டாதது, அதற்கு உருவம் இல்லை , அருளானது, அன்பானது என்று ஆக்கிக் கொண்டான். அதன் காரணமாக அறிவு பெற்றான். தாராளமாக தன் அறிவைச் செலுத்தி முன்னேறுகின்றான்.

அடுத்த நாட்டுக்காரன் முஸ்லிம். அவர்களும் காட்டுமிராண்டிகளாக கல்லைக் கட்டிக்கொண்டு அழுதவர்களாக இருந்தவர்கள் தான் முகமது நபி தோன்றி அவற்றையெல் லாம் ஒழித்து ஒரே கடவுளையும், அது பிறப்பு இறப்பு இல்லாததாகவும், ஒன்றும் வேண்டாததாகவும், பட்ட அருளானதாகவும், அன்பானதாகவும் ஆக்கிக்கொண்டான். அதன் காரணமாகவே முன்னேறுகின்றான்.

நம் நாட்டில் இந்த காட்டுமிராண்டிக் கடவு ளையும், மதத்தையும் ஒழிக்க எவனும் முன்வரவில்லையே. அதன் காரணமாகத்தானே நமக்கு இந்த இழிநிலை.

தோழர்களே! இப்படி ஒரே கடவுள், உருவம் அற்ற கடவுள் உடையவர்களும், ஜாதி இல்லாதவர்களாக, உயர்வு - தாழ்வு அற்றவர்களாக உள்ள முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இந்த நாட்டை ஆண்ட காலத்தில் கூட நம்மைத் திருத்த முடியவில் லையே; தங்களைப்போல் நம்மையும் ஆக்க முடியவில் லையே. பார்ப்பானுடைய எதிர்ப்புக்கண்டு இவன்களும் நமக்கு ஏன் வம்பு என்று பார்ப்பானை பார்ப்பானாகவும் பறையனை பறையனாகவும் தானே வைத்துவிட்டுப் போனார்கள்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் வந்து 13 ஆண்டுகள் ஆகியும் இந்த நாட்டில் இன்னமும் பார்ப்பான் இருக்கின்றானே. இந்த நாட்டு 636 ராஜாக்களையும் ஜமீன்தாரர்களையும், மிட்டாதார்கள் ளையும் ஒழித்து அவர்களை எல்லாம் இஸ்பேட்டு ராஜாவாக்கி சம்பளக்காரனாக தன் ஆட்சியில் வைத்துள்ளவர்கள் இந்தப் பார்ப்பானை மட்டும் ஏன் ஒழித்து இருக்கக் கூடாது? சுதந்திரம் வந்த நாட்டில் பார்ப்பான் ஏன்? ராஜாக்களை முடியைக் கழற்றி வைக்கச் சொன்னவர்கள் இந்த பார்ப்பானை ஏன் பூணூலையும், உச்சிக் குடுமியையும் கத்தரித்து எடுத்துவிட்டு மற்றவர்கள் போல் மண்வெட்டி எடுக்கவும், கல்லுடைக்கவும், மலம் எடுக்கவும் ஏன் கூறக்கூடாது? எதற்காக நமக்கு கோயில்? எதற்காக இந்த கடவுள்? இந்த மதம்? இந்த கடவுளையும் கோயிலையும் உடைத்தெறிய வேண்டாமா? கிருஸ்தவ மதத்தை உண்டாக்கிய ஏசு கூறினாள், கோயில் எல்லாம் திருட்டுப் பசங்கள் வாசம் பண்ணக்கூடிய குகை என்றார்.

காந்தியார் ஆயிரம் புரட்டு பித்தலாட்டம் பேசி இருந்தாலும், ஏதோ தவறி ஓர் இடத்தில் உண்மையையும் கூறி இருக்கின்றார்; "இந்தக் கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி" என்றார். பார்ப்பான் திட்டினான். உன் கோயில் மட்டும் அல்ல, உன் கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான் என்று கூறியுள்ளார். 

எதற்காக அய்யா மனிதனுக்கு இத்தனை ஆயிரம் கடவுள்கள்? பகுத்தறிவு படைத்த மனிதனுக்கு ஏன் அய்யா கடவுள்? வேண்டுமானால் கழுதைக்கு வேண்டும், மாட்டுக்கு வேண்டும், ஆட் டுக்கு வேண்டும்; இவைகள் எல்லாம் வாயில்லாப் பூச்சிகள். கழுதை முதுகில் பாரத்தை ஏற்றி வைத்து மனிதன் அடிக்கின்றான்; ஆட்டை வெட்டி மனிதன் தின்கின்றான்; மாட்டுக் கழுத்தில் நுகத்தடியை வைத்து அடிக்கின்றான். இவற்றைக் கேட்க அவற்றிற்கு வாய் இல்லை. எனவே, இவற்றிற்கு கடவுள் இருக்கவேண்டும். அதைவிட்டு ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஏன் அய்யா கடவுள்? அதிலும் இத்தனை ஏன்? நம்மை முட்டாளாகவும், மடையர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் ஆக்கி இருக்கும் காரணம் இந்த கடவுள் நம்பிக்கைகளேயாகும்.

நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த கிருஸ்தவனும், முஸ்லிமும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்றான். 1960 ஆண்டுகளுக்கு முன் கிருஸ்து தோன்றி கிருஸ்துவர்களின் காட்டுமிராண்டிதனத்தை எல்லாம் ஒழித்து ஒரு கடவுள் உண்டு பண்ணினார். 1400 ஆண்டுகளுக்கு முன் முகமது நபி தோன்றி அவர்களின் மூடத்தனமான செய்கைகளையும், கடவுள்களையும் ஒழித்து ஒரு கடவுளை உண்டாக்கினார். உனக்கு அப்படியே உன் கடவுள் எப்போது ஏற்பட்டது? 10,000 ஆண்டு கணக்காக ஆகின்றது என்கிறாய். 10,000 ஆண்டுக்கு முன் என்றால் என்ன? காட்டுமிராண்டிக் காலம் குரங்காக இருந்த காலம் அல்லவா? இந்தக் காலத்து மனிதன் புத்தியில் ஏற்பட்ட கடவுள் இந்த விஞ்ஞான அதிசய அற்புதக் காலத்துக்கு ஏற்றதாகுமா? 

 நமக்கு மதம் என்ன அழுகின்றது? எவனாவது சொல்லட்டுமே. தெருவில் போகும் பார்ப்பான் நாம் இந்து மதம் என்றால் நாம் ஏற்றுக்கொள்வதா? இதன் காரணமாகத்தானே நீ காட்டுமிராண்டி.

கிருஸ்துவனுக்கு கிருஸ்து மார்க்கம் இருக்கின்றது; முஸ்லிமுக்கு முகமதிய மதம் இருக்கின்றது. ஆதா ரம் என்ன என்றால், கிருஸ்துவனுடைய மதத்தை ஏற்படுத்தியது, ஏசு ஏற்பட்டு 1960 ஆண்டாகின்றது. இதற்கு ஆதாரம் என்ன என்றால், பைபிள் என்கின்றான். 

முஸ்லிமைக் கேட்டால் முகமது ஏற்படுத்தினார். 1400 வருஷமாகின்றது, ஆதாரம் குரான் என்கின்றான். 

உன் மதம் யாரால் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? அதற்கு ஆதாரம் என்ன? எவனாவது கூற முடியுமா? 

முட்டாளாகி நீதான் இந்து மதம் என்கின்றாய். சங்கராச்சாரி கூறுகின்றார், இந்த மதத்தை இந்து மதம் என்று கூறுவது தவறு; இதனை வைதீக மதம் அல்லது பிராமண மதம் என்றுதான் கூறவேண்டும் என்கின்றார். நம்மவன் எவனாவது இதுபற்றி சிந்திக்கின்றானா? இல்லையே! 

 நமது இழிநிலையும், காட்டுமிராண்டித்தனமும் ஒழியவேண்டு மானால் இவைகளுக்குக் காரணமான இந்த கடவுளும், மதமும், சாஸ்திரமும் ஒழியவேண்டும். இவற்றை வைத்துக்கொண்டு ஒருநாளும் சாதியை ஒழிக்க முடியாது; நமது காட்டுமிராண்டித்தனம் ஒழியாது. 

(12, 13, 14.10.1960 ஆகிய நாட்களில் வன்னியூர் , மருங்கூர், மயிலாடி, நாகர்கோயில் ஆகிய இடங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி)
விடுதலை- 30.10.1960

Read 35 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.